கர்நாடக முதல்வர் சித்தராமை யாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இந்த தீர்ப்பின் காரணமாக சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளுநர் அனுமதி அளித்ததை உயர் நீதிமன்றம் ஏற்று கொண்டிருப்பதால், சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீஸாரும் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் தார்மீக அடிப்படையில் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘‘இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டது. எனக்கு எதிராக பாஜகவும் மஜதவும் இணைந்து சதி செய்கின்றன. சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன். காங்கிரஸ் மேலிடமும் எம்எல்ஏக்களும் எனக்கு ஆதரவாக இருப்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்.
இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து செயல்படுவேன். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.
இந்த நிலையில் இன்று காலை கர்நாடக அமைச்சரவை கூட்டம் அவசரமாக கூடுகிறது. சித்தராமையாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.