திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீரபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் – சௌபாக்யா தம்பதி . இவர்களின் மூத்த மகளான ஒன்பது வயது சிறுமி தான்யா அரிய வகைc நோயால் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சிறுமி தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி வீட்டிற்கு நேரடியாக சென்று பல்வேறு அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
அத்துடன் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 9 மணி நேரமாக உயர் தொழில்நுட்ப அதி நவீன முக அறுவை சிகிச்சையானது, 31 மருத்துவ குழுவினர் அடங்கிய மருத்துவர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உடல்நிலை தேறினார். முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி தான்யா நலமுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி தான்யா, மீண்டும் சிகிச்சைக்காக தண்டலம் சவிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . சிறுமி தான்யாவை நேரில் சந்தித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் நலம் விசாரித்தார். அப்போது போனில் தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமி தான்யாவை நலம் விசாரித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.