ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.8.2020 ஆம் தேதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் பசுபதி(27), வரதராஜ்(29), திருப்பதி (29) ஆகிய மூன்று பேர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு மூவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பசுபதி, வரதராஜ், திருப்பதி ஆகிய மூன்று பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு திருச்சி மகிலா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பசுபதி, வரதராஜ், திருப்பதி மூன்று பேருக்கும் 20 வருட சிறை தண்டனையும், 15000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜாகிர் உசேன் ஆஜராகி அரசு சார்பாக வாதாடினார்.