பெரம்பலூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் துறைமங்கலம் கே. கே நகரை சேர்ந்தவர் வையாபுரி மகன் செல்வம் (45). இவர் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 10ம் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து இதனை வெளியே சொன்னால் கொலை செய்து செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழும், கொலை மிரட்டல் விடுத்த சட்டத்தின் கீழும் வழக்குபதிந்து குற்றவாளி செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் செல்வம் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் சுந்தர்ராஜன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) தனசேகரன் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செல்வத்திற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தும், குற்றவாளி சிறை தண்டனைகளை ஏகபோக காலத்தில் அனுபவிக்கவேண்டும் உத்தரவிட்டார்.
இதையடுத்து குற்றவாளி செல்வத்தை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.