திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோரிக்கடவு பகுதியை சேர்ந்த முருகவேல் (32). இவர் கடந்த ஆண்டு பழனியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முருகவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இறுதி விசாரணை இன்று நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, வழக்கில் தீர்ப்பளித்த திண்டுக்கல் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி முருகவேலுக்கு 15 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.