சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3 ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டபோது எதிர்பாராத விதமாக மாடு முட்டி, மஞ்சுவிரட்டு பார்க்க வந்திருந்த வலையபட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பாஸ்கரன் உயிரிழந்தார். அதேபோல பார்வையாளராக வந்த முத்துமணி என்ற 35 வயது இளைஞரும் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.