ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் பல்வேறு விதிமுறைகள் மீறல் நடந்துள்ளதாகவும், அது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், அல்லூர் அரங்கன் பாதுகாப்பு பேரவை தலைவர் அல்லூர் பிரகாஷ் திருச்சி கலெக்டருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் கடந்த 2/01/2023 நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி தினத்தில் நம்பெருமாள் புறப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட தினத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்த தகவல்கள் செய்தித்தாள்கள், இ. செய்திகளிலும் வெளிவந்ததன. அதோடல்லாமல் ஸ்ரீரங்கம் வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அறிவர்.
விஐபி பாஸ்கள் , டிக்கட்களை அதிகவிலைக்கு விற்றவிவரங்கள்,கட்டண டிக்கட்களை ஒதுக்கீடு செய்த விவகாரம் உள்ளிட்ட எதிலும் வெளிப்படைதன்மை இல்லாமலும் செயல்பட்டது என்பது நெறியற்றசெயலாகும்.
அதிலும் திருக்கோவில் அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி இல்லாமலும், நிர்வாகத்தில் எவ்வித பணியாளராக இல்லாத நபர்களை செயல் அலுவலர் தனது குடியிருப்பில் வைத்து பாஸ் விநியோகம் செய்தது மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயலாகும். அந்த நபர்களுக்கும் செயல் அலுவலருக்கும் என்ன உறவு?
கடந்த காலங்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது முன்கூட்டியே திருக்கோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், திருக்கோவில் அதிகாரிகள், திருக்கோவில் கைங்கர்யபரர்கள், பக்தர்கள் கொண்ட பொது ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். சில வருடங்கள் கொரனா பொதுத்தொற்றால் நடைபெறாதது ஏற்புடையதே. தற்போது பொது ஆலோசனை கூட்டம் நடைபெறாமல் பல துறை அதிகாரிகள் தங்களுக்குள் கூட்டம் நடத்தி அவரவர் துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள்,நீதியரசர்களை பாதுகாப்பாக உள்ளே அழைத்து வந்து கோவிலில் பாதுகாப்பாக தரிசனம் செய்வித்து கார் ஏற்றி அனுப்பிவைக்கவே திட்டமிட்டது கண்கூடாக தெரிகிறது.இது குறித்த வெள்ளை அறிக்கையை தாங்கள் வெளியிட்டும் செயல் அலுவலர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டும் தவறான பாதைக்கு இழுத்து சென்றவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,திருக்கோவிலுக்கு சம்மந்தமில்லாத நபர்களிடம் இருந்து செயல் அலுவலர் விலகியிருக்க அறிவுரை வழங்கிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் உற்சவங்களில் நம்பெருமாள் புறப்பாடு காணும்போது அணிவிக்கப்படும் ஆடை,ஆபரணங்கள் ஒவ்வொன்றும் உலகபிரசித்தமட்டுமல்லாமல் பல வரலாற்று தொடர்புடைய விலை மதிப்பிட முடியாதவைகள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தற்போது நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் கடந்த சில நாட்களில் ஒருநாளும் கண்டிராத வழக்கத்திற்கு மாறாக நம்பெருமாள் சிரசில் மெய்வழிச்சாலை தலப்பாக்கட்டை போல துணிகளை கட்டியது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் நம்பெருமாள் அலங்காரங்களில் தங்கம் அல்லாத போலி நகைகளும் சாற்றப்படுவதை அறியமுடிகிறது. அரங்கன் ஆலயத்தில் இல்லாத நகைகளா? எதற்காக போலி நகைகள் வெளியிலிருந்து கொண்டு வந்து சாற்றப்படுகிறது. இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? இச்செயலில் பார்வையில் கொள்ளவேண்டிய உள்துறை கண்காணிப்பாளருக்கு ஏதும் சிறப்பு அனுமதி செயல் அலுவலரால் தரப்பட்டுள்ளதா?முக்கியமாக திருக்கோவிலின் மையமாக விளங்கும் இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்கள் செயல்பாடுகளை திருத்திட முன்பு பணியாற்றிய அனுபவஸ்தர்களிடம் பயிற்சி, ஆலோசனைகள் வழங்கிட கேட்டுக்கொள்வதில் செயல் அலுவலருக்கு ஏதேனும் ஈகோ உள்ளதா? தவறான நபர்களிடம் தகவல்கள் கேட்டு தவறான விளைவுகளை உள்துறையில் ஏற்படுவதை சரிசெய்திட செயல் அலுவலருக்கு தக்க அறிவுரைகளை வழங்கிடவும் தங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
மெய்வழிச்சாலை தலப்பாக்கட்டு ,போலி நகைகள் நம்பெருமாளுக்கு சாற்றப்பட்ட,சாற்றிவரும் அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்துறையில் வெளிபடுத்தன்மை ஏற்படுத்திட செயல் அலுவலருக்கு உத்தரவிட கேட்டுக்கொள்கிறோம்.
மேற்சொன்ன விஷயங்களை ஆய்வு செய்து ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் நீண்டகால பழக்கவழக்கங்கள், ஆகமங்கள் மரபுகளை வெளிப்படைதன்மையுடன் காத்து பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் ஆறாத ரணங்களை ஆற்றி அரசாள்பவர்கள்,பக்தர்களுக்கும் பொது சமூக அமைதிக்கும் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக பங்கம் எதிர்காலத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள தங்களிடம் கேட்டுக்கொள்ளபடுகிறது .
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.