By செந்தில்வேல் – August 6, 2022
Share E-Tamil News
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் மேலாண்மைத்துறை சார்பில் காவிரி ஆறு வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது... அரசு நிதியை கொண்டு கரூரில் முதன் முறையாக புத்தக திருவிழா 19ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 100 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் இடம் பெற இருக்கின்றன. காலை 10 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மாலை 4 மணி முதல் 8 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் போன்ற சான்றோகள் பங்கு பெற்று சிறப்பிக்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடத்தில் புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 1000 பேர் அமர்ந்து ரசிக்க கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சியில் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கப்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தக திருவிழாவில் பங்கு பெற பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றார்.
© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies