பாஜ., மேலிட தலைவர்கள் சசிகலாவுக்கு மறைமுக ஆதரவு?.....

By செந்தில்வேல் – August 6, 2022

38

Share E-Tamil Newsபாஜ கூட்டணி கட்சியான அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு 2024 பாராளுமன்ற தேர்லில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள். டில்லி தலைமையை பொறுத்தவரை அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலே அவர்களுக்கு இலக்கு. அதற்கு ஏற்ற வகையில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளவே விரும்புகிறார்கள். வலுவாக இருக்கும் தி.மு.கவை தேர்தல் களத்தில் சந்திக்க வேண்டுமென்றால் தங்கள் கைகளையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்கள். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் ஆதரவு அதிகமாக இருந்தாலும் ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் பிரிந்து இருப்பது சமுதாய அடிப்படையில் வாக்குகளை சிதறடிக்கும் என்று கருதுகிறார்கள். இந்த பிரிவு நிரந்தரமானது என்பது உறுதியாகி விட்டது. கட்சி தொண்டர்களை பொறுத்தவரை ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற கருத்து இருந்தாலும் கட்சி ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். கட்சியினரின் விருப்பத்தை புரிந்துகொண்டு சசிகலாவும் தன் பங்குக்கு அணிதிரட்ட தொடங்கி இருக்கிறார். அவர் இரு தரப்பினரையும் விமர்சிக்காமல் அனைவரும் ஒருங்கிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவோடு இணைந்து செயல்பட தயாராகி வருகிறார். மாவட்ட செயலாளர்களிடம் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணியினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளும்படியும், இணைந்து செயல்படும்படியும் ஓ.பி.எஸ். கூறியிருக்கிறார். இந்நிலையில் டில்லி தலைமையும் சசிகலாவுக்கு மறைமுக ஆதரவை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்து செயல்பட்டால் மேற்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இருக்கும். தென்மண்டலத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு ஆதரவு இருக்கும் என்று தமிழக நிலைமையை டெல்லி தலைமைக்கு எடுத்து சொல்லும் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எனவே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை இணைத்து ஒரு வலுவான அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள். சட்டரீதியாக அ.தி.மு.க. யார் வசமாகிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ற வகையில் வியூகம் அமைத்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரவீந்திரநாத்குமார் எம்.பி.யை அ.தி.மு.க உறுப்பினராக ஏற்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தின் மீது பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies