இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ”தகைசால் தமிழர்” விருது....

By செந்தில்வேல் – August 6, 2022

18

Share E-Tamil Newsதமிழகத்திற்கு தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டிற்கான 'தகைசால் தமிழர்' விருதுக்கு இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழ்நாட்டிற்கும். தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021 - ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சுலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு. விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவரும். ஏழை எளிய மக்களுக்காக குரல்கொடுத்து, சமூக நல்லிணக்கத்திணையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 'தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு, 10  லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2022 ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர்  ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் என்று இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies