இன்றைய முக்கிய செய்திகள்..

By செந்தில் வேல் – July 21, 2022

4454

Share E-Tamil News1.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார். 18ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த வாக்கு எண்ணிக்கையை, தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநிலங்களவை செயலாளருமான பி.சி.மோடி மேற்பார்வையிடுகிறார். முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த சுற்று முடிவடைந்ததும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை பி.சி.மோடி வெளியிடுகிறார். பின்னர் ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி மாநிலங்களின் வாக்குப்பெட்டிகள் திறந்து எண்ணப்படும். இதில் முதல் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டதும், 2-வது முறையாக வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை அவர் அறிவிப்பார்.20 மாநிலங்கள் முடித்த பின் ஒரு முறையும், பின்னர் மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் இறுதி நிலவரத்தையும், தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதி யார்? என்ற விவரம் மாலைக்குள் வெளியாகும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
 

 

2.அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஈபிஎஸ்., ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்படுகிறது. தலைமை அலுவலகத்தின் சாவியை வருவாய் துறையிடம் இருந்து எடப்பாடி பழனிச்சாமியின் மேனேஜர் பெற்றுக்கொள்கிறார்.

 

3. நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். இதன் அடிப்படையில் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இதற்கிடையே, ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சோனியா காந்தி இன்று ஆஜராகிறார்.

 

4. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா்.இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நேற்று நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 223 வாக்குகளில் 219 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் அதிபர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுரா திசநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணப்பட்டதில், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளும், அனுரா திசநாயக்க 3 வாக்குகளும் பெற்றனர். அதிகபட்சமாக 134 வாக்குகள் பெற்ற ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். இதனை அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

5. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் நேற்று கடுமையான இடியுடன் மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். பதேபூர், பண்டா, பல்ராம்பூர், சந்துலி, ரேபரெலி, அமேதி, கவுஷம்பி, சுல்தான்பூர், சித்திரகோட் ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.