உள்ளே 1 லட்சம் ... வெளியே 2 லட்சம் .... அமைச்சர் செந்தில்பாலாஜியின் பிரமாண்ட ஏற்பாடு..

By செந்தில் வேல் – June 30, 2022

4464

Share E-Tamil Newsதமிழக முதல்வர் ஸ்டாலின் 2ம் தேதி கரூரில் நடைபெறும் அரசுவிழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முதல்வராகப்பிறகு கரூருக்கு முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக வருவதால் அவரை வரவேற்க மாவட்டப்பொறுப்பாளரும் அமைச்சருமான செந்தில்பாலாஜி பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார். சென்னையிலிருந்து நாளை மதியம் திருச்சிக்கு விமானம் மூலம் வரும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்கிறார். முதல்வருக்கு கரூர் எல்லையான பெட்டவாய்த்தலை துவங்கி குளித்தலை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 2ம் தேதி காலை திருமாநிலையூரில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் 76 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். எப்போதும் இது போன்ற நிகழ்ச்சிகளில் முதல்வர்கள் சுமார் 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார்கள். நிகழ்ச்சிக்கு பின்னர் மற்றொரு நாளில் அதிகாரிகள் மற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். ஆனால் கரூரில் நிகழ்ச்சியில் முதல்வர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியவுடன் பந்தலில் அமர்ந்திருக்கும் 76 ஆயிரம் பேருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக முதல்வரானப்பிறகு கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொள்வதால் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார். 2ம்தேதி காலை முதல்வர் ஸ்டாலின் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து திருமாநிலையூருக்கு வரும் வழியில் சுமார் 30 இடங்களில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். அதேபோல் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் 76 ஆயிரம் பயனாளிகளும் பந்தலில் வந்து அமர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் அமைச்சர். வரவேற்புக்கு 1.10 லட்சம் பேர் என கூறினாலும் அன்றைய தினம் 2லட்சம் பேர் கரூர் நகரத்திற்கு வர வேண்டும் என திமுகவினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.  முதல்வர் வரவேற்புக்கு 2 லட்சம் பேர், விழா நடைபெறும் பந்தலில் பயனாளிகளுடன் சேர்ந்து 1 லட்சம் பேர் இருக்க வேண்டும்  என உத்தரவிட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.. மொத்தத்தில் 2ம் தேதி கரூர் நகரம் குலுங்கப்போகிறது என்கின்றனர் திமுகவினர்..