இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பொருளாளர் ஓபிஎஸ்சுக்கு அடுத்த செக்...

By செந்தில் வேல் – June 27, 2022

4426

Share E-Tamil Newsபரபரப்பாக நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலியாகியுள்ளன. இதனால் இபிஎஸ் தலைமை நிலையச் செயலாளராகவும், ஓபிஎஸ் பொருளாளர் பதவியிலும் உள்ளனர். நேற்றைய தினம் நமது அம்மா நாளிதழில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். அவர் நேற்று தேனி மாவட்டத்தில் துவங்கி ஓபிஎஸ் தொண்டர்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை துவக்கினார். இந்த சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு என்ற பெயரில் ஓர் அறிக்கை நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022  திங்கட் கிழமை (இன்று ) காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஒபிஎஸ்-இபிஎஸ் பெயரில் தான் அழைப்பு விடுக்கப்படும். ஆனால் தற்போது இருவரும் பதவி இழந்துள்ள நிலையில் தலைமை அலுவலகம் என்கிற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அழைப்பு காரணமாக வெளியூர்களில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அவசர அவசரமாக நேற்று இரவு சென்னை திரும்பினர். இன்று நடைபெறும் கூட்டத்தில், ஆதரவாளர்களை  ஓபிஎஸ் சந்தித்து வருவது, வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவது, மாவட்டம்  தோறும் பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள்  குறித்து இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் எடப்பாடி தலைமையில் ஆலோசனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாளர் பதவியில் இருக்கும் ஓபிஎஸ்க்கு செக் வைக்கும் வகையில் கட்சி சொத்துக்கள் பற்றிய விபரங்கள் மற்றும் கணக்கினை குறிப்பிட்ட நாளுக்குள் சமர்பிக்க கூறி முடிவு செய்து நிர்வாகிகள் கூட்டத்தில் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எடப்பாடி தரப்பின் இந்த மூவ் ஓபிஎஸ் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது... 

© E-Tamil News. All Rights Reserved. Design by IZone Technologies