By senthil – June 24, 2022
Share E-Tamil News
எடப்பாடி பழனிசாமியுடன் இன்று காலை அவரது ஆதரவாளர் அவசர ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
1.12.2021 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கட்சி விதிகளை திருத்தி இந்த தேர்வு நடந்தது.
திருத்தப்பட்ட விதியின் கீழ் தேர்வு நடந்ததால் இந்த தேர்வுக்கு பொதுக்குழு தான் ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால் நேற்று நடந்த பொதுக்குழுவில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஒப்புதலுக்காக நாங்களும் அந்த தீர்மானத்தை வைக்கவில்லை. எனவே நேற்று முதல் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், பதவி காலாவதியாகி விட்டது.எனவே ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுக பொருளாளர் தான்.
அதுபோல இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் பதவியும் காலியாகிவிட்டது. இனி எடப்பாடி தலைமை நிலைய செயலாளராகவும் , வைத்திலிங்கம் மாவட்ட செயலாளராகவும் இருப்பார்கள். அதிமுகவில் இப்போது இரட்டை தலைமை பதவி காலி.
ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத நிலையில் அவர்களால் நியமிக்கப்பட்ட மற்ற நிர்வாகிகள் கட்சியை நடத்தலாம் என்பது அதிமுக விதி.
பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒருபங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் 30 தினங்களுக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி நேற்று 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கொடுத்த கடிதத்தின்படி வரும்11ம் தேதி பொதுக்குழு கூட்டப்படுகிறது. அவைத்தலைவர் தாமாக பொதுக்குழுவை கூட்டவில்லை.
அவைத்தலைவரையும் பொதுக்குழு உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களே தமிழ்மகன் உசேனை தேர்வு செய்தனர்.