By செந்தில்வேல் – June 24, 2022
Share E-Tamil News
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரி பேருந்து வழக்கம்போல கரூரிலிருந்து 60 மாணவிகளுடன் இன்று காலை கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பஸ் டிரைவர் மகேஷ் (43) என்பவர வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகும்போது முன்னால் நின்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான அரிசி லாரியின் மீது பின்னால் வந்த கல்லூரி பஸ் மோதியதால் 14 கல்லூரி மாணவிகளுக்கு காயங்கள் ஏற்பட்டு கரூர் அண்ணா வளைவு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து மாணவிகளின் பெற்றோர்கள்
ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து கொண்டுள்ளனர். இதற்கிடையில், தொடர்ந்து தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் ஏற்கனவே முறையாக பேருந்தை இயக்காத காரணத்தால் சிறு விபத்துகள் 2 முறை ஏற்பட்டுள்ளதாகவும், மதுபோதையில் பஸ் டிரைவர் வாகனத்தை இயக்குவதாகவும் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். எனவே, போக்குவரத்து துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.