40 எம்எல்ஏக்கள் போர்க்கொடி... முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே இன்று ராஜினாமா?

By செந்தில் வேல் – June 24, 2022

94

Share E-Tamil Newsமகாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ., மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இக்கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தபோதும், முதல்வர் பதவி தொடர்பாக மோதல் ஏற்பட்டதால், கூட்டணி முறிந்தது. இதையடுத்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து, மகாராஷ்டிரா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை உருவாக்கி, சிவசேனா ஆட்சி அமைத்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் சிலர் திடீரென குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள 'ரிசார்ட்'டிற்கு சென்றனர். இவர்கள் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். முதல்வரை கூட சந்திக்க முடியவில்லை என்றும் தொடர்ந்து கட்சியில் அவமானப்படுத்தப்படுவதாக கூறியுள்ளனர். ஷிண்டேவுக்கு ஆதரவாக, 37 சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஒன்பது சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.தற்போது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள இவர்களை சமாதானப்படுத்த, சிவசேனா கடும் முயற்சியை எடுத்து வருகிறது. முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், அரசு இல்லத்தில் இருந்து தன் சொந்த வீட்டுக்கு அவர் குடி புகுந்தார்.கவுஹாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சிலர், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் கட்சியிலும், ஆட்சியிலும் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. இதையடுத்து, எங்களுடைய வலியுறுத்தலால், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கும் துரதிருஷ்டவசமான முடிவை ஏக்னாத் ஷிண்டே எடுக்க நேர்ந்தது.சொந்தக் கட்சியைச் சேர்ந்த முதல்வரை நாங்கள் சந்திக்க முடியவில்லை. அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள கட்சியினர் சாதாரணமாக சந்திக்க முடிந்தது. இந்த நேரத்தில் ஷிண்டே எங்களுடைய குறைகளை, பிரச்னைகளை காது கொடுத்து கேட்டார்; தீர்வு காண்பதற்கும் உதவினார். ராஜ்யசபா தேர்தலின்போது, ஒரு இடத்தை இழப்பதற்கு நாங்கள் காரணம் இல்லை. உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு உங்கள் மகனும், அமைச்சருமான ஆதித்ய தாக்கரே சென்றபோது, எங்களை ஏன் உடன் அழைத்து செல்லவில்லை? ஹிந்துத்துவா, ராமர் கோவில், அயோத்தி ஆகியவை நம்முடைய பிரச்னை இல்லையா?இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் கவுஹாத்தியில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன், சிவசேனாவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கட்சியை உடைப்பதற்கு தேவையான 37 எம்.எல்.ஏ.,க்களை விட அதிகமானோர் தன்னிடம் உள்ளதாக ஏக்னாத் ஷிண்டே கூறியுள்ளார். இந்நிலையில், 12க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, கவுஹாத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மஹாராஷ்டிரா சட்டசபையில், சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், 40க்கும் மேற்பட்டோர் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.