By செந்தில்வேல் – June 23, 2022
Share E-Tamil News
நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த மொத்தம் 776 எம்பிக்கள், மாநில சட்டமன்றங்களை சேர்ந்த 4033 எம்.எல்.ஏக்கள் என 4809 மக்கள் பிரதிநிகள் சேர்ந்து வாக்களித்து குடியரசு தலைவரை தேர்வு செய்கின்றனர். குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். 64 வயதான இவர், தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் முதல் பழங்குடியினப் பெண் ஆவார். . இவர் முன்னாள் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அரசியல் வாழ்க்கையை கவுன்சிலராக தொடங்கிய முர்மு, ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநரானார். தற்போது குடியரசு தலைவர் வேட்பாளராக களம்காண்கிறார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை திரௌபதி முர்மு சந்தித்தார். நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக டெல்லி வந்துள்ள திரௌபதி முர்மு பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதை அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அடிப்படை பிரச்சனைக்கான புரிதல் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான திரௌபதியின் பார்வை சிறப்பானது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.