விடுதலை புலி ஆதரவாளர்கள் விடுதலை..... இந்தியாவை விட்டு வௌியேற உத்தரவு

By senthilvel – June 22, 2022

188

Share E-Tamil Newsஇலங்கையை சேர்ந்த சுபாஷ்கரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள். இவர்களை 2015-ல் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிலையம் அருகே க்யூபிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர். அப்போது இருவரிடம் இருந்து சயனைட் குப்பிகள், சேட்டிலைட் போன், செல்போன், சிம்கார்டுகள், இந்திய பணம், இலங்கை பணம் உட்பட பல்வேறு பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை மறுகட்டமைக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், இருவருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி நீதிபதி 2018ல் உத்தரவிட்டார்.  இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி கே.முரளி சங்கர் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய், திருமுருகன் வாதிடுகையில், மனுதாரர்கள் இந்தியாவில் இனிமேல் சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டார்கள். சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவர் என்றனர். இது தொடர்பாக பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையேற்று நீதிபதி, மனுதாரர்கள் 6 ஆண்டுகள் 10 மாதம் சிறையில் இருந்துள்ளனர். இருவருக்கும் ராமநாதபுரம் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனை, 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கப்படுகிறது. மனுதாரர்கள் சிறையிலிருந்து விடுதலையானதும் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இந்தியாவை விட்டு வெளியேறும் வரை அகதிகள் முகாமில் தங்கியிருக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.