மோசடி மன்னனுடன் உல்லாச வாழ்க்கை....பெண் போலீஸ் சஸ்பெண்ட்...

By செந்தில்வேல் – November 24, 2022

348

Share E-Tamil News



சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பி.எம் ரெட்டி (எ) லைன் முத்துவேல் மீது மத்திய குற்றப்பிரிவில் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக மதுரையைச் சேர்ந்த தனியார் கல்லூரி நிர்வாகி முகமது ஜலீல் என்பவரிடம் முத்துவேல் தன்னை பெரிய ஃபைனான்சியர் போல் காட்டிக்கொண்டு கல்லூரி விரிவாக்கப் பணிகளுக்காக 200 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி கமிஷனாக 5.46 கோடி ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இறுதியாக மோசடி மன்னன் முத்துவேலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சமீபத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் மோசடி மன்னன் முத்துவேல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மோசடி செய்து சம்பாதித்த முத்துவேலின் சொத்துக்களை முடக்கும் பணிகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஈடுபட்டு வந்த போது அஜ்மோல் என்பவர் பெயரில் ஒரு வீடு வில்லிவாக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அஜ்மோல் குறித்து விசாரணை நடத்தியதில் மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் அஜ்மோல் தற்போது துறைமுகம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் மோசடி மன்னன் முத்துவேல் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தபோது காவலர் அஜ்மோலுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானதும், காவலர் அஜ்மோல் ஏற்கெனவே விவாகரத்து ஆனவர் என்ற நிலையில், அவருடன் நெருங்கி பழகி வந்த முத்துவேல் வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டை அஜ்மோல் பெயருக்கு எழுதி வைத்து அவருடன் ஒன்றாக வசித்து வந்ததும் தெரியவந்தது.இந்நிலையில் ஒழுங்கு நடவடிக்கையாக தற்போது துறைமுகம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் அஜ்மோலை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அடுத்தகட்டமாக மோசடி மன்னன் முத்துவேலுடன் தொடர்பில் இருந்து ஒன்றாக வசித்து வந்த காவலர் அஜ்மோலை சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் எங்கெல்லாம் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.