சங்கடத்தை ஏற்படுத்தும் மூத்த நிர்வாகிகள்-அமைச்சர்கள்..முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்...

By செந்தில்வேல் – October 9, 2022

4452

Share E-Tamil Newsசென்னையில் இன்று நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் 2வது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேச்சு திமுகவினர் மட்டுமல்லாது பொதுமக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. அதிலும் குறிப்பாக மூத்த தலைவர்களின் சர்ச்சை பேச்சு தனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக வெளிப்படையாக பேசினார் முதல்வர் ஸடாலின்.. .சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் சொல்வதாக இளங்கோவடிகள் எழுதியிருப்பார். எது வந்தாலும் பொறுப்பேற்க வேண்டியன் மன்னன் தான். எனவே பதவியில் துன்பமே தவிர இன்பம் இல்லை என்கிறார் இளங்கோ. மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். மழை அதிகமாகப் பெய்து வெள்ளம் வந்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். பல்வேறு பக்கங்களில் இருந்தும் வரக்கூடிய பன்முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவன் நான். ஒருபக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இருக்கிறது என் நிலைமை.இத்தகைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய என்னை மேலும் துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது? நாள்தோறும், காலையில் கண் விழிக்கும்போதே நம்மவர்கள் யாரும் புது பிரச்சனையை உருவாக்கி இருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்கி விடுகிறது. உங்கள் செயல்பாடுகள் கழகத்திற்கும் உங்களுக்கும் பெருமை ஏற்படுவது போல் அமையவேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக்கூடாது. பொது நன்மைக்காக மட்டுமல்ல, உங்கள் நன்மைக்காகவும் சேர்த்தே இதனைச் சொல்கிறேன். பொது இடங்களில் சிலர் நடந்துகொண்ட செயல்கள் காரணமாக திமுகழகம் பழிகளுக்கு, ஏளனத்திற்கு ஆளானது. இன்றைக்கு நம் வீட்டின் பாத்ரூம், படுக்கை அறையைத் தவிர அனைத்துமே பொது இடம் ஆகிவிட்டது. ப்ரைவேட் ப்ளேஸ் என்று எதுவும் இல்லை. எல்லோருக்கும் மூன்றாவது கண்ணாக செல்போன் முளைத்துபிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாக பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய சொற்கள் மிகமிக முக்கியமானவை ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். பொதுமேடைகளில் மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் பேசும்போது கூட எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள். என மிக எதார்த்தமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்..