பொதுச்செயலாளர் விவகாரம்... சசிகலாவின் மேல்முறையீ்ட்டு வழக்கு இறுதி விசாரணைக்கு தள்ளிவைப்பு

By senthilvel – September 27, 2022

4444

Share E-Tamil Newsமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறை சென்றார். இதையடுத்து, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கம் செய்தனர். பொதுச் செயலாளர் பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை புதிதாக உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை சிவில் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிவில் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில், முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு கோரிக்கையின் அடிப்படையில் இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு அக்டோபர் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.