ஹிஜாப் அணிந்தால் தான் பேட்டி.... அமெரிக்காவில் அடம்பிடித்த ஈரான் அதிபர்

By செந்தில்வேல் – September 23, 2022

114

Share E-Tamil News இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த 13-ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை போலீசார் மாஷா அமினி மற்றும் அவது குடும்பத்தினரை இடைமறித்துள்ளனர்.

 மாஷா அமினி தனது தலைபகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா போலீஸ் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா அமினியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர்.

 கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், மாஷா மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்ததாக ஈரான் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஈரானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் எடுத்த நடவடிக்கையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும், பெண்களின் இந்த போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக ஈரானில் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அமெரிக்கா வந்துள்ள ஈரான் அதிபர் ரைசியிடம் பேட்டி எடுக்க அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் திட்டமிட்டிருந்தது. ஈரான் அதிபரிடம் சிஎன்என் செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் கிறிஸ்டினா அமன்புர் பேட்டி எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், பேட்டி எடுக்க வேண்டுமானால் செய்தியாளர் கிறிஸ்டினா ஹிஜாப் அணிய வேண்டும் என ஈரான் அதிபர் ரைசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் இங்கு ஹிஜாப் சட்டமில்லை என்றும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிறிஸ்டினாவுக்கு பேட்டி அளிக்க ஈரான் அதிபர் மறுத்துவிட்டார். மேலும், அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இது தொடர்பாக ஈரான் அதிபருக்காக வைக்கப்பட்ட இருக்கை காலியாக இருக்க அதற்கு எதிர்புறம் தான் அமர்ந்திருப்பது போல் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்டினா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பதிவில், பேட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 40 நிமிடங்களுக்கு பிறகு அதிபரின் உதவியாளர் வந்தார். அவர், இது புனித மாதமான மொகரம் என்பதால் நான் ஹிஜாப் அணிய வேண்டும் என அதிபர் ரைசி அறிவுறுத்தியதாக கூறினார்.

நான் அதை மென்மையாக ஏற்கமறுத்துவிட்டேன். நாம் இப்போது நியூயார்க்கில் இருக்கிறோம். இங்கு ஹிஜாப் தொடர்பாக சட்டங்களோ, பழக்கமோ கிடையாது என்றேன். ஈரானுக்கு வெளியே நடைபெறும் பேட்டிகளில் எந்த ஈரான் அதிபரும் என்னிடம் ஹிஜாப் அணியவேண்டும் என கூறவில்லை என நான் உதவியாளரிடம் கூறினேன். நான் ஹிஜாப் அணியவில்லை என்றால் நேர்காணல் நடைபெறாது என திட்டவட்டமாக கூறினார்.

மேலும், இது மரியாதை தொடர்பானது என்றார். ஆனால், இந்த எதிர்பாராத கட்டுப்பாட்டை நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினேன். பின்னர், நாங்கள் அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம். நேர்காணல் நடக்கவில்லை. ஈரானில் போராட்டங்கள் நடைபெற்று வரும் மக்கள் கொல்லப்படும் சூழ்நிலையில் அதிபர் ரைசியுடன் பேசுவது மிகவும் முக்கியம் என கருதுகிறேன்' என்றார்.