2வது ஒருநாள் போட்டி.... இங்கிலாந்தை வீழ்த்தி..... தொடரை வென்றது இந்திய மகளிர் அணி

By செந்தில்வேல் – September 22, 2022

12

Share E-Tamil Newsஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கேன்டர்பரி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்தார். அவர் 143 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்லின் தியோல் 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. டேனில் வியாட் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 69 ரன்னில் அவுட்டானார். அலிஸ் கேப்சி, எமி ஜோன்ஸ் தலா 39 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சார்லட் டீன் 37 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து மகளிர் அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டும், ஹேமலதா 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர்.