பாடகர் யேசுதாஸ் பல வருடங்களாக இசையுலகில் லெஜண்டாக இருப்பவர் யேசுதாஸ். சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள் என பல ஜானர்களில் தனது குரல் என்னும் கோலை கொண்டு ஆட்சி செய்பவர். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.
யேசுதாஸ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். முதன்முதலாக ஜாதி பேதம் மத துவேஷம் என்ற பாடலின் மூலம் 1961ஆம் ஆண்டு அறிமுகமானார். முதல் பாடலே பல ஏற்ற இறக்கங்களை கொண்டிருந்தது. அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் அறிமுக பாடகர் பாடியது போல் அல்லாமல் ஏற்கனவே 100 பாடல்களை பாடியவர் பாடியது போல் பாடி ஆச்சரியப்படுத்தியிருப்பார் யேசுதாஸ்.
தற்போது கேரளாவில் வசித்துவரும் கே.ஜே.யேசுதாஸுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ‘யேசுதாஸ் நலமோடு இருக்கிறார். பரிசோதனைகள் எல்லாம் முடிந்த பிறகு அவர் வீடு திரும்புவார்’ என்று தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியடைந்திருக்கின்றனர். இருப்பினும் அவரது உடல்நிலைக்கு என்ன ஆனது; எந்த மாதிரியான பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பது குறித்து மருத்துவமனை விரைவில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.