சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பவதாரிணியின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதைப்போல நடிகர்கள் சிவகுமார், ராமராஜன், விஷால், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், சதீஷ், ஆனந்த்ராஜ், உதயா, விஜய்யின் தாயாரும், பாடகியுமான ஷோபா சந்திரசேகர், காயத்ரி ரகுராம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், மிஷ்கின், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, எழில், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், சீனு ராமசாமி, சுதா கொங்கரா, சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பொதுமக்களும் பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் நேற்று இரவு பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் தேனி லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, பவதாரிணியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. பவதாரிணி உடலுக்கு பட்டுச் சேலை போர்த்தி, அண்ணன்கள் இறுதிச்சடங்கு செய்தனர். பவதாரிணியின் உடலைச் சுற்றி, `மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலை பாடி குடும்பத்தார் உருகியது காண்போரை கண்கலங்கச் செய்தது. பவதாரிணியின் உடலை சகோதரர்கள் சுமந்து சென்றனர். பின்னர் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.