தஞ்சை மோத்திரப்ப சாவடியை சேர்ந்த மாணவன் ஸ்ரீநிலேஷ் கார்த்திக். 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 7ம் வகுப்பு படிக்கும் போது சிலம்பம் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்று பல தேசிய போட்டிகளில் பங்கேற்று 12 தங்க பதக்கம், 6 வெள்ளி பதக்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் வென்று வெற்றி பெற்றுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் பங்கேற்க இந்த மாணவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரது தாயார் நல்லம்மாள் கணவரால் கைவிடபட்ட நிலையில் மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்து மகனை மிகுந்த சிரமத்திற்கு இடையில் படிக்க வைத்து வருகிறார்.
ஏழ்மை நிலை என்பதால் தன் மகனை சர்வதேச சிலம்பம் போட்டியில் பங்கேற்க வைப்பதற்கு பணம் இன்றி நல்லம்மாள் கஷ்டப்படும் நிலைமை குறித்து அறிந்த தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், மாவட்ட தி.மு.க.செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த ஏழை மானவனுக்கு உதவி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்ற எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் பங்கேற்க அனைத்து உதவிகளும் செய்து கொடுத்தார். மேலும் சர்வதேச சிலம்பம் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீநிலேஷ் கார்த்திக் ஒரு தங்கம் பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பியவுடன் தனக்கு உதவி செய்த மாவட்ட தி.மு.க செயலாளர் துரை.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட தி.மு.க.விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன் ஆகியோரை சந்தித்து தான் வென்று வந்த பதக்கங்களையும் சான்றிதழ்களையும் காண்பித்து நன்றி கூறி வாழ்த்து பெற்றார்.