Skip to content

சட்டமன்ற தேர்தல்.. சிக்கிம்மில் எஸ்கேஎம், அருணாச்சலில் பாஜக

சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அருணாச்சலப்பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம்மில் எஸ்கேஎம் கட்சியும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்த வரை பாஜக போட்டியின்றி தேர்வான 10 தொகுதிகளின் வெற்றியுடனேயே தனது கணக்கைத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது, தொடர்ந்து பெரும்பான்மையைத் தாண்டி முன்னிலை வகித்து வந்தது. இறுதியாக மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் 46 தொகுதிகளில் வென்று அருதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிஇபி) 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. அங்கு அருணாச்சல் மக்கள் கட்சி (பிபிஏ) இரண்டு இடங்களிலும், தேசிய காங்கிரஸ் கட்சி (என்சிபி), சுயேட்சைகள் தலா மூன்று இடங்களிலும். காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 தொகுதிகளில் ஆளும் எஸ்கேஎம் கட்சி 31 இடங்களில் வென்று இமாலய வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. சிக்கிம்மை பொறுத்தவரை ஆளும் எஸ்கேஎம் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பவன் குமார் சாம்லிங்கின் எஸ்டிஎஃப் கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலைவியது.

இரு கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. பாஜகவும், காங்கிரஸும் அங்கு வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. பாஜக 31 வேட்பாளர்களையும், காங்கிரஸ் கட்சி 12 வேட்பாளர்களையும், சிட்டிசன் ஆக்ஸன் பார்ட்டி – சிக்கிம் கட்சி 30 வேட்பாளர்களையும் நிறுத்தி இருந்தன.

மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான எஸ்கேஎம் கட்சி 17 இடங்களிலும், எதிர்கட்சியான எஸ்டிஎஃப் 15 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. கடந்த பேரவைத் தேர்தல் மாநிலத்தில் அதுவரை நடந்து வந்த எஸ்டிஎஃப் கட்சியின் 25 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!