Skip to content

தூத்துக்குடி: பஸ்சில் ஏறி பள்ளி மாணவனுக்கு சரமாரி வெட்டு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவன், திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று பள்ளிக்குச் செல்வதற்காக பஸ்சில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தான். அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் பஸ்சை வழிமறித்து உள்ளே ஏறி உள்ளது.

அந்த கும்பல் பஸ்சில் இருந்த 17 வயது மாணவனை வெளியே இழுத்து போட்டனர். மேலும், கையில் வைத்திருந்த அரிவாளால் மாணவனை அந்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டியது. மாணவனுக்கு தலையில் பல வெட்டுகள் விழுந்தன. பஸ்சில் இருந்தவர்கள் சத்தம் போடவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. பஸ்சில் வந்த சக பயணிகள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர், வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி ஐ கிரவுண்ட்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கபடி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!