நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் முன்னரே இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு அனைத்து கட்சிகளுடனும் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது. காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தையை இறுதி செய்ய அந்த கட்சியின் தேசிய தலைவர் வரும் 18 அல்லது 19ம் தேதி சென்னை வந்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.அதனைத்தொடர்ந்து மற்ற கட்சிகளின் தொகுதிகளும் முடிவு செய்யப்படும் என்ற நிலை உள்ளது.
இது தவிர அதிமுக, பாஜக கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதிமுகைவை பொறுத்தவரை பாஜக கூட்டணி்யே வேண்டாம் என உதறிவிட்டு வெளி்யே வந்து விட்டது. ஆனால் அந்த கட்சியுடன் பிரதான கட்சிகள் எதுவும் இதுவரை சேர முன்வரவில்லை. இதே நிலை தான் பாஜகவுக்கும். பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜிகே வாசன் ஆகிய 3 பேர் மட்டும் அந்த கட்சியுடன் உறவில் உள்ளனர். இவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டுவங்கி பெரிதாக இல்லை. எனவே இவர்களை நம்பி தேர்தல் களத்தில் இறங்க முடியாது என பாஜக கருதுகிறது.
எனவே அதிமுக , பாமகவை பாஜக பக்கம் கொண்டுவரும்படி வாசனுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அதன்படி அவரும் இரு கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதில் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை என்பதை அவர் மேலிடத்தில் தெரிவித்து விட்டார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், அனைத்து கட்சிகளுக்குமே (அதிமுக உட்பட) கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அதிமுக கூட்டணி தொடர்பாகவும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். நாட்டில் யாரும் கட்சியை (நடிகர் விஜய்) தொடங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம். அதே நேரத்தில் யாருக்கு வாக்குகள் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னமும் தயாராகிவில்லை. நாட்டில் தமிழ்நாடும் மிக முக்கியமான மாநிலம். தமிழ்நாட்டுக்கான நிறைய திட்டங்கள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்என்று அந்த பேட்டியில் கூறி இருந்தார்.
அதிமுகவுக்கு பாஜக மேலிடம் வெளிப்படையாக விடுத்த இறுதிக்கட்ட அழைப்பாக இதை அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.
அமித்ஷாவின் இந்த அழைப்புக்கு அதிமுகவின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பதில் அளித்து கூறும்போது, அவர்கள் வேண்டுமானால் கதவை திறந்து வைத்திருக்கலாம். பாஜகவை பொறுத்தவரை எங்கள் கதவை சாத்திவிட்டோம் , நாங்கள் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்றார்.
இதுபோல இன்னொரு முன்னாள் அமைச்சரான வைகை செல்வன் கூறும்போது, நாங்கள் பாஜகவை கடந்து வெகுதூரம் வந்து விட்டோம். அவா்கள் மீண்டும் ஆதரவு கோரினால், அதை பொதுக்குழு தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.
எனவே அடுத்த கட்டமாக பாமக, தேமுதிகவையாவது கூட்டணிக்குகள் கொண்டுவந்து விடவேண்டும் என பாஜக பகீரதபிரயத்தனம் செய்கிறது. அதே நேரத்தில் இந்த இரு கட்சிகளையும் தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எந்த அணியில் யார், யார் இடம் பெறப்போகிறார்கள் என்பது விரைவில் பகிரங்கமாக வெளியாகும்.