தமிழ்நாடு பெண் போலீஸ் பொன்விழாவையொட்டி காவல்துறை சார்பில் மாநில அளவிலான மகளிர் காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி 08.06.2023 முதல் 09.06.2023 வரை நடத்தப்பட்டது. மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டியை நடத்துவதற்கு, காவல் துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்களால் தமிழ்நாடு அரசின் மூலம் அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியத்திடம் (AIPSCB) அனுமதியைப் பெற்றுத் தருமாறு கோரப்பட்டது. அதன்படி, 2024 ஜூன் 15 முதல் ஜூன் 20 வரை போட்டியை நடத்த அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி 15.06.2024 முதல் 20.06.2024 வரை தமிழ்நாடு காவல்துறையினரால் ‘மகளிர் காவலருக்கான சிறப்பு அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டி’ செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது.
இதில், 13 விதமான போட்டிகள்பல்வேறு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இவை ரைபிள் (5 போட்டிகள்), பிஸ்டல்/ரிவால்வர் (4 போட்டிகள்) & கார்பைன்/ஸ்டென்கன் (4 போட்டிகள்) பிரிவுகளில் அகில இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியம் வழங்கிய சமீபத்திய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நடத்தப்படும்.
இதில் காவல்துறை அமைப்புகள் / மத்திய ஆயுதப்படைகளின் 30 அணிகளை சேர்ந்த 8 உயர் அதிகாரிகள் உட்பட 454 மகளிர் காவலர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு உதவிட, அணி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் 176 பேர் பங்கேற்க உள்ளனர்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா வரும் 20ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் ராசரத்தினம் விளையாட்டரங்கத்தில் நடைபெறும். முதல்வர் ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு சான்றிதழ், கோப்பைகளை வழங்குகிறார். – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவு விழாவின் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.