பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபின் மோகா மாவட்ட சிவசேனை கட்சித் தலைவராக மங்கத்ராய் செயல்பட்டு வந்தார். மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது மங்கத்ராயை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “இறந்தவர், மங்கத் ராய் என்ற மங்கா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையின் மோகா மாவட்டத் தலைவராக இருந்தார். மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த மங்காவை (52), இரவு 10 மணியளவில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் முதலில் 12 வயது சிறுவன் காயமடைந்தான். இதைக் கண்டு தப்பித்த மங்காவை அந்த மர்மநபர்கள் விரட்டிச் சென்று சூட்டனர். இதில், பலத்த காயமடைந்த மங்காவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர்.