தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் கடந்த மாதம் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்தது. இந்த பகுதி வழியாகத் தான் நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி, அம்மாப்பேட்டை மார்க்கமாக செல்லும் பஸ்கள் சென்று வருகின்றன. பயணிகள் பேருந்துகள் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து மேற்கண்ட பகுதிகளில் உள்ள கோயில்கள், சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளின் பஸ்கள், வேன்கள், கார்கள் என்று இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும்.
எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் 3 பஸ் நிறுத்தங்களிலும் பயணிகள் நிழற்குடை கிடையாது. மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையையும் சேர்த்து அதிகாரிகள் அகற்றி விட்டனர். இதனால் அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்படாததால் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். கொளுத்தும் வெயில், கொட்டும் மழை என்று பயணிகள் நிழலுக்காகவும், மழையில் நனையாமல் இருப்பதற்காகவும் அருகில் உள்ள கடைகளில் ஒதுங்குகின்றனர்.
எனவே இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். இதனால் பெண்கள் சிரமமின்றி பஸ்சிற்கு காத்திருந்து குழந்தைகளுடன் செல்ல முடியும். எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.