பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியா நாட்டில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் 33 வயதான பெண், பணிப்பெண்ணாக இருந்தார். அந்த பணிப்பெண்ணை, விமானத்தில் பயணம் செய்த ஒருவர் அழைத்து தனக்கு மதுபானம் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே அந்த பெண்ணும், மதுபானம் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அந்த சந்தர்பபத்தில் பணிப்பெண்ணிடம் அந்த பயணி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த பெண்ணின் அழகை வர்ணித்ததுடன், 100 டாலர் கொடுப்பதாகவும் கூறி அவரது கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூருவுக்கு விமானம் வந்திறங்கியதும் நடந்த சம்பவங்கள் குறித்து தேவனஹள்ளி விமான நிலைய போலீஸ் நிலையத்தில் பணிப்பெண் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர் மாலத்தீவை சேர்ந்த அக்ரம் அகமது (வயது 51) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.