புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பர் ரமேஷ். திருமணமானவர். இவர் கடந்த வாரம் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் மற்றும் 2 மாணவர்களை தனது காரில் கொடைக்கானல் அழைத்து சென்று தங்கி உள்ளார்.
மாணவர்களுக்கு தனி அறை, மாணவிகளுக்கு தனி அறை எடுத்து கொடுத்து தங்கிய ரமேஷ், மறுநாள் மாணவ மாணவிகளை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து விட்டு விட்டார். இதுபற்றி பெற்றோரிடம் கூற வேண்டாம். பிரச்னை பண்ணினால் மார்க்கை குறைத்து பெயில் ஆக்கிடுவேன் என்றும் மிரட்டி விட்டாராம். இதனால் மாணவிகள் கொடைக்கானலில் நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் மாணவிகள் உடல் சோர்வுடன், அவர்களது நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டதால் அவரது பெற்றோர்கள் விசாரித்து உள்ளனர். அப்போது 3 மாணவிகளும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி உள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பள்ளியில் போய் விசாரித்தபோது தான் உதவி தலைமை ஆசிரியர் யாருக்கும் தெரியாமல் மாணவிகளை கொடைக்கானல் அழைத்து சென்றது தெரியவந்தது. கொடைக்கானலில் இரவில் தங்கிய இருந்தபோது ரமேஷ், மாணவிகளை தனது அறைக்கு அழைத்து சென்று தவறாக நடந்து கொண்டு உள்ளார். அத்துடன் மாணவிகளுடன் பல புகைப்படங்களையும் எடுத்து உள்ளார். மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா கீரனூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ரமேஷ் மற்றும் கொடைக்கானல் சென்ற 3 மாணவிகள் உள்பட அனைவரையும் அழைத்து விசாரித்தபோது ரமேஷின் அட்டகாசங்கள் தெரியவந்தன. அதன் பேரில் அவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கல்வித்துறை அதிகாரிகள் ரமேசை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.