தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், கடந்த சில மாதங்களாக மாணவ-மாணவியரிடம் அத்துமீறிய புகார்கள் அடுத்தடுத்து பெறப்பட்டு இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். பள்ளி மாணவ – மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், அதிகாரிகள் குழு பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.
இந்நிலையில், மாணவ – மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, போக்ஸோவில் கைதாகிய அரசுப்பள்ளி ஆசிரியரால் 23 பேர் பணிநீக்கம் செய்யட்டுள்ளனர். தற்போது வரை 46 போக்ஸோ வழக்குகள் பள்ளி ஆசிரியர் மீது நிலுவையில் இருக்கும் நிலையில், 23 வழக்கில் இறுதி விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இதனால் 23 ஆசிரியர்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் கல்வி சான்றிதழும் ரத்து செய்யப்பட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அரசுப்பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருவோர், பாலியல் வழக்கில் சிக்கி குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களின் எதிர்கால நலன் என அனைத்திலும் கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அரசு வல்லுனர்களுடன் திட்டம் தீட்ட ஆலோசனையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.