Skip to content
Home » ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

  • by Senthil

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. ஜே இ இ அட்வான்ஸ்டு தகுதித்தேர்வு எழுதி  அதில் கட்ஆப் மார்க் பெறுவதன் மூலம் இந்த கல்லூரியில் சேர முடியும். இங்கு இந்தியா முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.  இங்கு மாணவர்கள், மாணவிகளுக்கென விடுதி வசதியும் உள்ளது. சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு படிக்கிறார்கள்.

மாணவிகளுக்கு 12 விடுதிகள் உள்ளன. நேற்று மதியம் என் ஐ டி கல்லூரி   மகளிர் விடுதியில் வைபை இணைப்பில்  ஏற்பட்ட பழுதை சரி செய்ய   என் ஐ டி  ஒப்பந்த பணியாளரான முதுகுளத்தூர்  கதிரேசன் (38) என்பவர்  விடுதிக்குள்  சென்றுள்ளார். அப்போது பாதுகாப்புக்காக விடுதி வார்டன்கள் யாரும் செல்லவில்லை. தனியாக சென்ற கதிரேசன், விடுதியில் தூங்கிகொண்டிருந்த ஒரு மாணவியிடம்  முறைகேடாக நடந்துள்ளார்.

இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி கூச்சலிட்டு கொண்டு வெளியே ஓடி வந்ததோடு இச்சம்பவம் குறித்து சக மாணவ மாணவிகளிடம் கூறினாா.

இது குறித்து   பெற்றோருக்கும்  அவர் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் வரைந்து வந்த அந்த மாணவியின் தந்தை  இச்சம்பவம் குறித்து உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை அதிரடியாக கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும் விடுதி வார்டனின் பொறுப்பின்மையை

கண்டித்தும்  கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட  சம்பவம் குறித்து  கல்லூரி மாணவ மாணவிகளின் சமூக வலைதளங்களில் அதிரடியாக பரவியது.

பெண்கள் விடுதிக்குள் ஒரு ஆணை எப்படி அனுமதிக்கலாம் என மாணவிகள் வார்டனிடம் கேட்டு உள்ளனா. அதற்கு அந்த வார்டன்கள் 3 பேர்,  மாணவிகள் ஒழுங்காக உடை உடுத்தினால் ஏன் இப்படி நடக்கப்போகிறது? என கூறினாராம்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரியின் நிர்வாகத்தையும், விடுதி வார்டனையும் கண்டித்து விடுதியின் முன் திரண்டு இரவு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்னர். பின்னர் கல்லூரி வளாகத்தில் உள்ள  கல்லூரி இயக்குனர் அகிலா வீட்டையும் முற்றுகையிட்டனர்.  விடிய விடிய இந்த போராட்டம் நடந்தது.

தகவல் கிடைத்ததும் திருச்சி கோட்டாட்சியர் அருள்,  திருவெறும்புர் தாசில்தார்  ஜெயப்பிரகாசம் ஆகியோா் கல்லூரிக்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த நிலையில் பெண் வார்டன்களில் ஒருவர், தனது பேச்சுக்கு மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டாராம். இன்னும் 2 வார்டன்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை மாணவ, மாணவிகள் சுமார் 500 பேர் திருச்சி-தஞ்சை சாலையில் மறியல் செய்ய திரண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து  கல்லூரியின் மெயின் கேட் இழுத்து மூடப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் மெயின் கேட் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு முதல் இன்று காலை 9 .30 மணி வரை போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.  மாணவிகள், என்.ஐ.டி கல்லூரி வார்டன் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்தார்.

துவாக்குடி போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் எஸ்.பி. கோபால் சந்திரனும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஆனாலும் இன்னும் சமரசம் ஏற்படவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!