புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பெருமாள் (58). இவர் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர், அந்த பள்ளியை சேர்ந்த 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்துமாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரி வசந்தகுமார், சமூக நலத்துறை அதிகாரி கோகுலபிரியா, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமார், கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, திருமயம் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் 7 மாணவிகளும், உதவி தலைமை ஆசிரியர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர். அவற்றை போலீசார் வீடியோவாக வாக்குமூலம் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்படி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அரசு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாளை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.