இங்கிலாந்தில் ஓராண்டில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 3 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். லண்டன், உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்கள் கடந்த 2020-ம் ஆண்டு மூடப்பட்டன. எனினும், பல பகுதிகளில் ஆன்லைன் வழி கல்வி தொடர்ந்தது.
3 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது, பள்ளி, கல்லூரிகள் செயல்பட தொடங்கி உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தில் என்.ஜி.ஓ. எனும் அரசு சாரா அமைப்பு சார்பில், பள்ளி மாணவ மாணவிகளை பற்றி வெளியிட்ட புள்ளி விவரம் ஒன்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி கூடங்களில் பயிலும் மாணவர்கள், சக மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக அவர்களை சஸ்பெண்டு செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன் பள்ளி கூடங்களில் இதுபோன்ற விசயங்களுக்காக வெளியேற்றப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2018-19-ம் ஆண்டில் 1,866 ஆக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட 2020-2021-ம் ஆண்டுக்கான புள்ளி விவரத்தின்படி பாலியல் சார்ந்த தவறான நடத்தைக்காக பள்ளி கூடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 3,031 என அதிர்ச்சி தெரிவிக்கின்றது. 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்று எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் படிக்கும் முதன்மை பள்ளி மாணவர்களிடையேயும் இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன்படி, 2018-19 ஆண்டில் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 144 ஆக இருந்தது.
ஆனால், 2019-20 ஆண்டில் இந்த எண்ணிக்கை 243 ஆக உயர்ந்து உள்ளது. பல பள்ளிகளில் அதிர்ச்சி ஏற்படுத்தும் இந்த நிலை காணப்படுகிறது. பள்ளி மாணவ மாணவியர்கள் அதிகம் அச்சமடைந்தும், அதிர்ச்சியடைந்தும் உள்ளனர். வகுப்பு தலைவர்களும் இதனை மறைக்கவோ அல்லது வளர்ந்து வரும் இந்த நெருக்கடியை தவிர்க்கவோ செய்கின்றனர் என கூறப்படுகிறது. பாலியல் சார்ந்த தவறான நடத்தைகள், துன்புறுத்தல்கள் அல்லது வன்முறைகளுக்கு எதிராக பள்ளிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என கல்வி துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இதுபோன்ற விசயங்களை பற்றி எடுத்து விளக்குவதற்காக ஆசிரியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசு சார்பில் ரூ.82.15 கோடி அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.