கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சமபவத்தன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா தலைமையிலான பணியாளர்கள் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.அப்போது அந்த பள்ளியில் 7, 8, 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 9 பேர், தங்களிடம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் நடராஜன் (வயது 54) என்பவர் செக்ஸ் டார்ச்சர் செய்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருந்த தாகவும் கூறினர். இதையடுத்து மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இடைநிலை ஆசிரியர் நடராஜ், பிரச்சனை தெரிந்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் மீது சிறுமுகை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பள்ளியில் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொந்தரவு செய்ததும், இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள், மூத்த பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் இச்சம்ப வத்தை போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடைநிலை ஆசிரியர் நடராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த பிரச்சினை தெரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணையில் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் கைதான ஆசிரியர் நடராஜனின் அட்டூழியத்தை மூடிய மறைத்தது உறுதியானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.