சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக ஒரு முன்னாள் மாணவி புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ஹரிபத்மன் என்ற ஆசிரியர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும், இதன் காரணமாகவே கலாஷேத்ராவில் முதுகலையை தொடர முடியாமல் வெளியறேியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்படது. இந்த பாலியல் தொல்லை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட சென்னை கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீர் தலைமறைவானார்.
கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கடந்த 30ம் தேதி மாணவ மாணவிகளுடன் ஹைதராபாத் சென்றிருந்தநிலையில் அவர் தலைமறைவானார். சென்னையில் அவர் ரகசிய இடத்தில் பதுங்கி இருந்தார். அவரது செல்போன் சிக்னலை வைத்து அவர் இருந்த இடத்தை கண்டறிந்த போலீசார் ஹரிபத்மனை கைது செய்தனர்.