இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேட்டன் சர்மா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்திருக்கிலாம் என கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவுக்கான காரணம் குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக சமீபத்தில் அவர் பேசிய ஒரு வீடியோவில் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த வீடீயோ காரணமாக முன்னணி வீரர்கள் மற்றும் வாரிய தலைவர் ஜெய்ஷா ஆகியோரின் கோபத்திற்கு ஆளான நிலையில் சேட்டன் சர்மா இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அவரது ராஜினாமாவுக்கான காரணம் குறித்து கூறப்படும் வீடியோவில் சர்மா என்ன பேசினார் என்பதை பார்ப்போம்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் கோலி – கங்குலி இடையே இருந்த மோதல் பற்றி சேத்தன் சர்மா பேசி இருக்கிறார். அதேபோல் கோலி – ரோஹித் சர்மா இடையே இருக்கும் ஈகோ மோதல் பற்றியும் பேசி இருக்கிறார். இது போக கேப்டன் பதவி பெறுவதற்கு முன் ஹர்திக் பாண்டியா தனது வீட்டிலேயே தவமாக தவம் கிடந்தது பற்றியும் சேத்தன் சர்மா பேசி இருக்கிறார். முக்கியமாக இந்திய அணியில் வாய்ப்பு பெறுவதற்காக சிலர் அடிக்கடி சேத்தன் சர்மா வீட்டிற்கு சென்றதும், அவரிடம் நட்பாக இருந்ததும் உறுதியாகி உள்ளது. சேத்தன் சர்மாவிடம் இப்படி இறங்கி போகாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது.
இதனால் சேத்தன் சர்மா மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் இப்போதுதான் பணியில் சேர்க்கப்பட்டார். விரைவில் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்டிங் ஆபரேஷன் தொடர்பாக ரோஜர் பின்னி மற்றும் ஜெய் ஷா இருவருக்கும் தகவல்கள் சென்றுள்ளன. இரண்டு பேருமே இந்த வீடியோக்களை பார்த்து சேத்தன் சர்மா மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை தோல்விக்கு பின் சேத்தன் சர்மா நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் சேர்க்கப்பட்ட அவர் தற்போது மீண்டும் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக அவர் 3 வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசிய சில விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேத்தன் சர்மா தனது பேச்சில், சஞ்சு சாம்சனை அணியில் எடுக்கவில்லை என்றால் அது பெரிய பிரச்சனை ஆகும். ட்விட்டரில் பேன்ஸ் கடுமையான புகார்களை வைக்க வாய்ப்புகள் உள்ளன. நாம் சஞ்சுவை தேர்வு செய்யவில்லை என்றால் நமக்கு எதிராக ரசிகர்கள் புகார் வைப்பார்கள் என்று கூறி உள்ளார். மேலும் ஒருநாள் போட்டியில் கில் இரட்டை சதம் அடித்துள்ளார். அதேபோல் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து உள்ளார். இதனால் இந்திய அணியில் 3 பேருக்குத்தான் சிக்கல். 2 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் கே எல் ராகுல், சஞ்சு சாம்சன் எதிர்காலம் இதனால் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதேபோல் ஓப்பனிங் வீரர் ஷிகர் தவான் எதிர்காலமும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. இஷான் கிஷன், கில் இருவரும் தொடர்ச்சியாக ஆடி வருகிறார்கள். ரோஹித் சர்மா இனி டி 20 அணியில் இருக்க மாட்டார். ஹர்திக் பாண்டியா எதிர்காலத்தில் நிரந்தர கேப்டனாக இருப்பார், என்று சேத்தன் சர்மா தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.