சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
1967ல் ஆட்சிக்கு வந்ததும் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என அண்ணா கூறினார். பாஜக ஆட்சியில் தான் சேது சமுத்திர திட்டத்திற்கான பாதை எது என தீர்மானிக்கப்பட்டது. சேதுசமுத்திர திட்டம். மாற்றுப்பாதையை கண்டறிந்து சேது சமுத்திர திட்டத்தை பாஜக நிறைவேற்றவில்லை. அதை நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக சட்டப்பேரவை எண்ணுகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டின் கடலோர பாதுகாப்பு பலப்படும். இந்த திட்டம் நிறைவேறினால் 50 ஆயிரம்பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்தை முதலில் ஜெயலலிதாவும் ஆதரித்தார்.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.
அதைத்தெடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் கோ.க.மணி, பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பலர் ஆதரித்து பேசினர்.
ஓபிஎஸ் பேசும்போது, இந்த திட்டத்தை வேண்டாம் என்று ஜெயலலிதா கூறவில்லை. அந்த இடத்தில் மணலை அள்ளி வெளியேற்றினாலும் மீண்டும் மீண்டும் மணல் வந்து கொண்டு தான் இருக்கும் அதனால் பணம் வீணாகும். என்று தான் ஜெயலலிதா கூறினார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், இந்த திட்டத்திற்கு எதிராக ஜெயலலிதா கோர்ட்டுக்கு சென்றார் என்றார்.
அதைத்தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அவர் பேசியதாவது: கடல் வாணிபம் செழிக்க வேண்டுமானால் இந்த திட்டம் அவசியம். 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கடல் வாணிபம் செய்தவர்கள். திமுக சார்பில் இந்த திட்டத்தை வரவேற்கிறேன். நமது முதல்வர் இப்போது ஆழ்கடலில் பந்தை வீசியிருக்கிறார். நிச்சயம் வெற்றிகோப்பையுடன் வருவார் என்றார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, இந்த தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.