செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் மே 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
அப்போது வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு கூடுதல் மனு செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் ஆவணங்கள் வழங்கப்பட்டது. கடந்த 25ம் தேதி நடந்த வாதத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ‛‛தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணம் மற்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் வித்தியாசம் உள்ளது. தேதி, மாதம் திருத்தப்பட்டுள்ளது. உண்மை கண்டறிய நிபுணர் குழு ஆய்வு அல்லது தடயவியல் துறை சோதனை மேற்கொள்ள வேண்டும்” என கூறப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 30-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதன்படி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மதியம் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை ஒத்திவைக்க செந்தில் பாலாஜி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதாவது வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனுவுக்கு அமலாக்கத்துறையிடம் பதில் கோரிய நீதிமன்றம் மனு மீதான விசாரணை ஜுன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.