சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்தாண்டு ஜூன் 14 ம் தேதி, அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த 6ம்தேதி உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க, அமலாக்கத்துறையினர் 5நாட்கள் அவகாசம் கோரியிருந்தனர். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் அரியமாசுந்தரம், அமலாக்கத்துறை கூடுதல் அவகாசம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் 320 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாகவும் உடனடியாக ஜாமின் வழங்கவும் உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 15 ம் தேதிக்கு(இன்று) ஒத்தி வைத்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு, செந்தில் பாலாஜி தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்ததும், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனக்கு மேலும் பல வழக்குகள் உள்ளது. எ னவே செந்தில் பாலாஜி வழக்கை ஒத்திவைக்க வேண்டும். அத்துடன் இந்த வழக்கை 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று செசன்ஸ் கோர்ட் அளித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம், வழக்கை இழுத்தடிக்கவே ஒத்திவைக்கும்படி கேட்கிறார்கள். வழக்கை ஒத்திவைக்க கூடாது. இன்று நடத்த வேண்டும்.330 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் உள்ளார். அவருக்கு இடைக்கால ஜாமீனாவது வழங்கவேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை நாளைக்கு(வியாழன்) ஒத்திவைத்தனர். எனவே வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெறும்.