செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 250 நாட்களுக்கும் மேலாக அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் கூறியதாவது… அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாக தெரிவிக்கின்றனர். செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்தியது, அப்போதைய முதல்வருக்கு எதிராக கோஷமிட்டது, கொரோனா விதிகளை மீறியது, என அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்குகள் அவை . இந்த 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட மூன்று வழக்குகள் தவிர, மீதமுள்ள ஆறு வழக்குகள், போஸ்டர் ஒட்டியது, முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள்தான். எனவே, 30 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை முன் வைத்த வாதம் தவறு.மேலும், கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்குக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேலை வாங்கித் தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டதாக அமலாக்கத் துறையினரே கூறுகின்றனர். அமலாக்கத் துறை ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயார் என வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.