Skip to content

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு….ஐகோர்ட்டை நாட சிறப்பு கோர்ட் அறிவுறுத்தல்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் மூத்த வக்கீல் என்ஆர் இளங்கோ கோர்ட்டில் முறையிட்டார்.

அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்து வரும்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு 120 பக்க குற்றப் பத்திரிகை நகல் மற்றும் 3 ஆயிரம் பக்க வழக்கு ஆவணங்களை நேற்று முன்தினம் வழங்கியது.

அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் என்ற சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தான் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி அந்த மனுவை திரும்ப அனுப்பி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஜாமீன் கோரி  அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி முன்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்’ என்றும் முறையிட்டார். அதற்கு நீதிபதி, இந்த ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் தனக்கு உள்ளதா? என்பதை பார்க்க வேண்டியது இருப்பதாகவும், ஜாமீன் மனுவுக்கு மனு எண் வழங்கப்பட்டு விசாரணைக்கு பட்டியலிடட்டும் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த சூழலில் இந்த ஜாமீன் மனு இன்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணி ஆகியோர் நீதிபதி ரவி முன்பு ஆஜராகி ஜாமின் மனுவை விசாரிக்க கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமீன் தொடர்பாக ஐகோர்ட்டை நாட செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது என்றும் ஐகோர்ட்டை அணுகி ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து முடிவெடுக்கவும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!