முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தார். இரு நீதிமன்றங்களிலும் மனுக்கள் தள்ளுபடியான நிலையில் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் முன் கடந்த வாரம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடக்கூடாது என்று மனு தாக்கல் செய்தனர். செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடக்கூடாது என்பதற்காகவே இந்த மனுவை தாமதமாக தாக்கல்செய்கிறார்கள். வழக்கை அமலாக்கத்துறையினர் இழுத்தடிக்கிறார்கள் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் காலதாமதத்திற்கு மன்னிப்பு கோரப்பட்ட நிலையில் வழக்கை நீதிபதிகள் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அதன்படி இன்று காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், செந்தில் பாலாஜி 328 நாளாக சிறையில் உள்ளார். அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா 5 நாள் அவகாசம் கேட்டார். இதற்கு ஆர்யமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள் இனி எந்த அவகாசமும் கேட்ககூடாது எனக்கூறி வரும் 15ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.