மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 15மாதங்களாக அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை செசன்ஸ் கோர்ட், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி சார்பில் வக்கீல் ராம் சங்கர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது.கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜர்ஜ் அமர்வு , செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற நிபந்தனைப்படி செந்தில் பாலாஜியின் உறவினர்கள் தியாகராஜன், சிவபிரகாசம் ஆகியோர் ஆகியோர் ரூ.25 லட்சத்துக்கான பிணை உத்தரவாதத்தை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மாலை அளித்தனர். மேலும் செந்தில்பாலாஜியின் பாஸ்போர்ட்டும் ஒப்படைக்கப்பட்டது. இதை நீதிபதி கார்த்திகேயன் ஏற்றார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிப்பதற்கான உத்தரவை அமர்வு நீதிமன்றம் மின்னஞ்சல் மூலம் புழல் சிறைக்கு அனுப்பியது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் செந்தில் பாலாஜி 471 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது அவர் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். சிறை வாசலில் ஆயிரக்கணக்கான திமுகவினர் மேள,தாளங்களுடன் செந்தில் பாலாஜியை வரவேற்றனர்.
