அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பஇதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 13 மாதங்களாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது பதில் அளிக்க ஏப்ரல் 29ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு காலஅவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் துவங்கி தொடர்ந்து அமலாக்கத்துறை பல்வேறு கட்டங்களில் கால அவகாசம் கேட்டு மே 6ம்தேதி வரை இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில், மே 8ம் தேதிவரை அமலாக்கத்துறை பதில் அளிக்ககாததால் உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடைபெறும் என ஜூலை 10ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் தேதி செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, விசாரணையை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்தார். 2 நாள் மற்றொரு வழக்கில் தான் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க கோரினார். இதற்கு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டினார்.
செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார் . அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஜூலை 12ம் தேதிக்கு விசாரணை நடைபெறும் என அறிவித்தது.
அதன்படி 12ம் தேதி பிற்பகல் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகாததால் வழக்கு விசாரணை 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 22ம் துஷார் மேத்தா ஆஜராகவில்லை.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். எனவே அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள். விசாரணை எப்போது முடியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும்.
இவ்வாறு அவர் வாதிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு(இன்று) உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.அதன்படி இன்று மாலை3 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகி, வாதாடினார். அப்போது அவர், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தவர். அவர் வெளியே சென்றால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியபோது கைப்பற்றப்படாத சீகேட் ஹார்டு டிஸ்க் அமலாக்கத்துறைக்கு எப்படி கிடைத்தது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் எங்கே?
அமலாக்கத்துறை வழக்கறிஞர்: லஞ்ச ஒழிப்பத்துறை போலீசிடம் இருந்து பெற்றுக்கொண்டோம்.
நீதிபதிகள்: அந்த பென் டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இல்லை என்பதே செந்தில் பாலாஜி தரப்பு வாதம்.
அமலாக்கத்துறை: அதை ஏற்க முடியாது.
நீதிபதிகள்: பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை தொடர்பு படுத்தும் டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை நாளைய தினத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த எளிய கேள்விக்கு எளியமுறையில் பதில் சொல்லுங்கள். இன்று உங்களிடம் பதில் இல்லை. நாளை பதிலுடன் வாருங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது. இன்று நீதிபதிகள் சரமாரி கேட்ட கேள்விகளால் அமலாக்கத்துறை திணறிப்போனது. எனவே வழக்கை நீதிபதிகள் நாளைய தினத்துக்கு(வியாழன்) ஒத்திவைத்தனர்.
ஆனால் மறுநாள் அந்த வழக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் கோர்ட்டில் முறையிட்டனர். அதற்கு நீதிபதிகள் வழக்கு ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.