பா.ஜ.க., ஐ.டி., பிரிவு தலைவர் நிர்மல்குமார் தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிர்மல்குமாருக்கு கடந்த நவம்பர் மாதம் தடை விதித்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்ட போது.. தனி நபர்கள் மட்டுமல்ல, பொதுவாழ்வில் உள்ளவர்களையும் அவதூறாக, தரைகுறைவாக விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. தனி நபரின் கண்ணியத்தை விட அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை பெரியதல்ல. எதிர்மனுதாரர் நிர்மல்குமாரின் விமர்சனம் மிகவும் மோசமானவை. அவதூறானவை. சமுதாயத்தில் இப்போதெல்லாம், சமூக வலைதளங்களில் ஒரு கணக்கை தொடங்கி, ஆதாரமே இல்லாமல் மனதில் நினைத்ததை எல்லாம் இஷ்டம் போல பேசுவது ஒருவித பழக்கமாகி விட்டது. இதை எல்லாம் சட்டப்படி அனுமதிக்க முடியாது. அமைச்சருக்கு எதிராக நிர்மல்குமார் பதிவு செய்துள்ள பதிவுகளில் அவமதிக்கும் வார்த்தைகள் ஏராளமாக உள்ளன. ஒரு பதிவில் அமைச்சர் செந்தில்பாலாஜி என்ன மக்கள் தலைவரா? என்று கேட்டுள்ளார். ஆனால், நிர்மல்குமார் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அப்படிப்பட்டவர், 5 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு தலைவரின் நற்பெயருக்கு குந்தகத்தை ஏற்படுத்த முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடுபவரை சமூக வலைதளங்களில் கேவலப்படுத்தியுள்ளார். அமைச்சரின் தம்பி குறித்தும் அவதூறான பதிவை வெளியிட்டுள்ளார். இவ்வாறு குற்றச்சாட்டுகளை சுமத்தும் அவர், அதற்கு ஆதாரமாக ஒரு ஆவணங்களைக் கூட தாக்கல் செய்யவில்லை. தள்ளிவைப்பு அமைச்சர் குறித்து கருத்து தெரிவிக்க இந்த ஐகோர்ட்டு தடை விதித்த பின்னரும், ஐகோர்ட்டுக்கு வெளியே ஊடகங்களில் அவதூறான கருத்துகளை தெரிவிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, நிர்மல்குமார் தரப்பு வக்கீல் வாதத்துக்காக இந்த வழக்கு விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.